இஸ்லாம் - ஏக இறைவனின் மதம்! தொகுத்து வழங்கியது: குளச்சல் சாதிக்.
நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். அன்பர்களே! உங்களையும், எங்களையும் படைத்த ஒரே இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மதம் இஸ்லாம்தான்..." (அல்குர்ஆன் 3:19) "இஸ்லாமைத் தவிர்த்து (வேறொரு) மதத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்" (அல்குர்ஆன் 3:85) அல்லாஹ் நம்மைப் படைத்தது மட்டுமில்லாமல், நம் அனைவருக்கும் உரிய வாழ்க்கை நெறியையும் கொடுத்திருக்கின்றான். இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும். அவனை எந்த முறையில் வணங்கவேண்டும், ஏன் படைக்கப்பட்டுள்ளோம் - அனைத்தையும் விளக்கமாக கூறியிருக்கின்றான். நாம் படைக்கப்பட்ட நோக்கம்...? குர்ஆன் கூறுகிறது: "உங்களில் மிகத்தூய்மையான செயல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன்." (அல்குர்ஆன் 67:2) ஆம்; இந்த வாழ்க்கை நமக்கொரு சோதனை! இதில் எந்த அளவிற்கு நாம் வெற்றி அடைகிறோம் என்பதைப் பொறுத்தே மறுமையின் நல்வாழ்வு நிச்சயிக்கப்படும். அந்த நாளில்.. "நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இத்னைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்." (அல்குர்ஆன் 4:48) இணைவைத்தல் என்றால் ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர்த்து அல்லது அல்லாஹ்வை வணங்குவதுடன் அவனது படப்பினங்கள் உம் சூரியன், மனிதன், சிலை, மற்ற உயிரினங்கள் போன்றவைக்கு வணக்க வழிபாடுகள் செய்வதாகும். இந்தக் குற்றத்தை இறைவன் மன்னிக்கவே மாட்டான். "ஜின்களையும், மனிதர்களையும் (எனக்குக் கீழ்ப்படிந்து) என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் கேட்கவில்லை. மேலும், எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை." (அல்குர்ஆன் 51:56-57) (மனித இனத்தைப்போல "ஜின்" என்ற இனத்தையும் அல்லாஹ் படைத்திருக்கின்றான். அவர்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள். நம் புறக்கண்களுக்கு மறைவானவர்கள்.) தன்னை வணங்கி, தனக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் ஏக இறைவன் அல்லாஹ் நம்மைப் படைத்திருக்கிறான். இஸ்லாமே நமது இயற்கை மதம்! அல்லாஹ் மேலும் கூறுகிறான்: "நேரான மார்க்கத்தை நோக்கி நீங்கள் உங்களுடைய முகத்தை உறுதியான ஓர்மைப்பாட்டுடன் திருப்புங்கள். (அதுவே) மனிதர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மதமாகும். அவன் படைத்த (மதத்)தை (எவராலும்) மாற்றிவிட முடியாது. இதுதான் நிலையான மதம். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ளவே மாட்டார்கள். அல்லாஹ் ஒருவனிடமே திரும்பி (இஸ்லாம் மதத்தின் மீது உறுதியாக இருந்து) அவ(ன் ஒருவ)னுக்கே பயந்து தொழுகையையும் கடைப்பிடித்து நடந்துகொள்ளுங்கள். இணைவைத்து வணங்குபவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்". (அல்குர்ஆன் 30:30-31) உண்மையான இறைவனாம் அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் வணங்காமல் அவன் ஒருவனையே வழிபடவேண்டும். இதுதான் நமது இயற்கையாகும். இந்த உள்ளுணர்வைக் கொடுத்தே அல்லாஹ், நம்மைப் படைத்திருக்கிறான். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளும் இயற்கையின் மதமான இஸ்லாமில்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான இஸ்லாமிய மதத்தை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்." (நூல்: புகாரி எண் 4775) உண்மை இதுதான், மனிதர்கள் அனைவரும் இஸ்லாமில்தான் பிறக்கிறார்கள். வளர்க்கப்படும் போதுதான் மதம் மாற்றப்பட்டு வருகிறார்கள். படைத்த இறைவனை விட்டு, அவன் படைத்த சிருஷ்டிகளை, கற்சிலைகளை, இயேசுவை வணங்குகிற பாவத்தில் பழக்கப்பட்டு வருகிறார்கள். இஸ்லாம் நமது இயற்கையான பிறப்பின் மதமாகும். முதல் மனிதனின் படைப்பே இஸ்லாமில்தான் ! பூமியில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா (ஏவாள்), அவர்களிலிருந்து பிறந்த நம் ஆதிகால முன்னோர்கள் அனைவரும் முஸ்லிம்களே! அதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்: "ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே இனத்தவராகவே இருந்தார்கள். (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் (தன்) தூதர்களை அனுப்பி வைத்தான். மேலும், அம்மனிதர்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து வைப்பதற்காக சத்திய இறைநூலையும் அருளினான். இவ்வாறு தெளிவான அத்தாட்சிகள் (உள்ள நூல்) வந்ததன் பின்னர் அதனைப் பெற்றுக் கொண்ட அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே (அந்தச் சத்திய நூலிற்கு) மாறு (செய்ய முற்)பட்டார்கள். ஆயினும், அவர்கள் மாறுபட்டு(ப்புறக்கணித்து) விட்ட அந்தச் சத்தியத்தின் பக்கம் செல்லும்படி நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (நேர்)வழி காடினான். இன்னும் (இவ்வாறே) தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்." (அல்குர்ஆன் 2:213) ஷைத்தானின் வழிகேடு! ஆம். அல்லாஹ்வின் நேர்வழியாம் இஸ்லாம் மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது. பின்னர்தான், மனிதர்களின் சொந்தக் கற்பனைகளில் உருவான மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த மதங்களின் மூலம் ஷைத்தான் (சாத்தான்) அதிகமான மனிதர்களை வழிகெடுத்தான். உண்மையான படைப்பாளனும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனுமான அல்லாஹ்வை விட்டுவிட்டு அற்ப படைப்புகளை வணங்கும்படிச் செய்தான். மகா பாவத்தில் வீழ்த்தினான். ஷைத்தானின் பாவ மதங்களைப் பற்றி எச்சரிக்கவும். அல்லாஹ்வின் நேர்வழியாம் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைக்கவும் இறைத்தூதர்கள் வந்தார்கள். உலகின் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்கள் பேசுகிற மொழியிலேயே பல தூதர்களை அல்லாஹ் அனுப்பினான். அத்தூதர்கள் அனைவரும் தம் மக்களை நோக்கி கூறியதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: "அல்லாஹ்வையே வணங்குங்கள்; ஷைத்தான்(காட்டும் கொள்கைகளை, மதங்)களை விட்டுவிலகி விடுங்கள்" என்றே அத்தூதர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அப்போது "அல்லாஹ்வின் நேர்வழியை (இஸ்லாமை) அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழிகேட்டிலேயே நிலைப்பெற்றவர்களும் அவர்களில் உண்டு"... (அல்குர்ஆன் 16:36) இயேசு யார்? இப்படி அல்லாஹ்வையே வழிபடும்படி பிரச்சாரம் செய்ய வந்த தூதர்களில் ஒருவர்தாம் இயேசு. கிறிஸ்தவ அன்பர்களோ, அவர்மீது கொண்ட நேசத்தினால் அவர் பெயரில் ஒரு மதத்தையே உண்டாக்கி, அவரையே வணங்குகின்றனர். அல்லாஹ்வின் தூய மதத்தைச் சிதைத்து, புதுப்புது மதங்களை உருவாக்கி, மனித சமுதாயத்தில் லிரிவினை உண்டுபண்ணி வந்த ஷைத்தான், இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக நிலைநிறுத்தப்பட்ட இஸ்லாமால் படுதோல்வி அடைந்தான். அல்லாஹ் தன் மார்க்கத்தின் மீது அவதூறு கூறி, அதை அழிக்க முயல்வோரைப் பற்றி பின்வருமாறு பேசுகிறான்: "அவன்தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மதத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மதங்களையும் அந்தச் சத்திய மதமான இஸ்லாம் வென்றுவிடும்படி அவன் செய்வான்". (அல்குர்ஆன் 9:33) "அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றார்கள். இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகெங்கும் ஒளிரும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்". (அல்குர்ஆன் 61:8) இறுதித் தூதரும் இஸ்லாமும் நபி முகம்மது (ஸல்) அவர்கள் புதிதாக எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை. எல்லாத் தூதர்களும் பிரசாரம் செய்த இஸ்லாமையே போதித்தார்கள். இவர்களின் வாழ்நாளில்தான் இஸ்லாமை அல்லாஹ் முழுமைப்படுத்தி இறுதிநாள்வரை வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் நிறைவு செய்தான். அல்லாஹ் கூறுகிறான்: "இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள்மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்கு இஸ்லாமை மார்க்கமாக அங்கீகரித்துக் கொண்டேன்". (அல்குர்ஆன் 5:3) மேலும் கூறுகிறான்: "(இஸ்லாமிய) மார்க்கத்தில் நிர்ப்பந்தமே இல்லை. ஏனென்றால், வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி (அடைவது எவ்வாறென்று) தெளிவாகிவிட்டது. ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். (தவிர) அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் நண்பர்கள் ஷைத்தான்கள்தாம் அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின்பால் செலுத்துகின்றன அன்றி, அவர்கள் நரகவாசிகள். மேலும் அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்". (அல்குர்ஆன் 2:256-257) "ஆகவே, அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியாத ஒருநாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மதத்தின் பக்கம் திருப்பிவிடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்". (அல்குர்ஆன் 30:43) நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்...
நன்றி: தாருல் ஹூதா எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! |
No Copyright ©2006-2015 darulsafa.com All Rights Reserved. |