மேஜிக் செய்வது இஸ்லாத்தில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? |
கேள்வி : மேஜிக் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? சிலர் கையில்
அணிந்து கொள்வதற்காக வளையங்களையும் கறுப்புக் கயிறுகளையும் கொடுக்கிறார்கள்,
இன்னும் சிலரோ தண்ணீரில் ஒதி ஊதிக் கொடுக்கிறார்கள் இவைக்கெல்லாம் இஸ்லாத்தில்
அனுமதி இருக்கிறதா? இருந்தால் ஆதாரம் தாருங்கள். (ஏ.அல்புரூனீ ஹாட்மெயில்
மூலமாக)
மேஜிக், சூனியம் ஆகிய இரண்டையும் குறிக்க அரபியில் 'ஸிஹ்ர்' என்ற சொல்
பயன்படுத்தப்படுகிறது. 'அழிவுக்கு இட்டுச் செல்லும் 7 பெரும்;பாவங்களைத்
தவிர்ந்து கொள்ளுங்கள்' எனக்கூறிய நபி (ஸல்) அவர்கள், அவற்றில் இரண்டாவதாக
ஸிஹ்ரையும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:
புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸிலிருந்து மேஜிக், சூனியம் செய்வது கூடாது என்பது தெளிவாகிறது. (மேலும்
பார்க்க: அல்குர்ஆன் சூரா அல்பகரா 2:102, ஃபத்வா பகுதியில் அடுத்து இடம்
பெறப்போகும் ஃபத்வா)
நோயை அகற்றுவதற்காக அல்லது இன்ன பிற காரணங்களுக்காக கழுத்தில் அல்லது கையில்
அல்லது இடுப்பில் நூல்களை, கயிறுகளை கட்டிக் கொள்வதும் தாயத்து போன்றவற்றை
தொங்கவிடுவதும் கூடாது. அதைப் போலவே மந்திரித்த தகடு, கற்பூரம் போன்றவற்றை
வீடுகளில் வணிக, தொழில் கூடங்களில் தொங்கவிடுவதும் கூடாது.
'யார் எதையேனும் தொங்கவிட்டுக் கொள்கிறாரோ அவர் (அல்லாஹ்வின் உதவியின்றி) அதன்
பொறுப்பிலேயே விடப்படுவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்:
அஹ்மது, திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தனது புஜத்தின் (மேல்கை) ஒரு வளையத்தை
அணிந்திருப்பதை கண்டார்கள். அவரிடம் 'எதற்காக இதனை அணிந்திருக்கிறீர் என
வினவினார்கள். உடலில் ஏற்படுகின்ற ஒருவித பலவீனத்தைப் போக்க என்று அவர்
பதிலளித்த போது, 'அதனை கழற்றி வீசி விடு. அல்லாமல் அது உன்னில் இருக்கிற
நிலையில் நீ மரணித்தால் நீர் ஜெயம் (வெற்றி) பெறவே மாட்டீர்' என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி), நூல்: அஹ்மத்)
எனவே கயிறு கட்டுவது தாயத்து கட்டி தொங்க விடுவது போன்றவை நமது நற்கருமங்களை
அழித்து நாசமாக்கி நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பதால் அவற்றிலிருந்து
விலகிக் கொள்ள வேண்டும்.
தண்ணீரில் ஓதிக் குடிப்பது சம்பந்தமாக ஸலபுகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள்
உள்ளதால் அவ்வாறு செய்வதிலிருந்து நாம் தவிர்ந்து கொள்வது சிறந்தது. அல்லாஹ்
மிக அறிந்தவன்.
|