குற்றங்களுக்கு தகுந்த தண்டனை

தாருல்ஸஃபாவிலிருந்து மு. சாதிக்

 உலக அரசியல் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் வரவேண்டும் நாடு சுதந்திரம் கிடைத்தது என்பது வெறும் பூச்செண்டுதான், அங்கு மக்களுக்கு பாதுகாப்பில்லை. குற்றங்களுக்கு தகுந்த தண்டனையில்லை. சிறைச்சாலைகளில் நாளுக்கு நாள் கைதிகள் அதிகமாவதே தவிர, குறையவில்லை. காரணம் தண்டனைகள் கடுமையாக இல்லை. ஒரு நாட்டில் இஸ்லாமிய சட்டம் அமுலுக்கு வந்தால், அங்கு கைதிகள் குறையும், கொலைக் கொள்ளை குறையும், கற்புகள் சூறையாடப் படுவது முற்றிலும் குறையும். அப்படி என்ன இஸ்லாமிய சட்டத்தில் இருப்பது?

இறைவன் மனிதனை எல்லா உயிரினும் மேலானதான படைப்பாகப் படைத்தான். இவ்வுலகில் உள்ள அனைத்து எழில்கள், சுகங்களையும் அனுபவிக்கக் கொடுத்தான், அத்தோடு நில்லாமல் எல்லாவற்றிற்கும் ஒரு ஒழுங்குமுறையையும் வகுத்து தந்துள்ளான். நல்லது கெட்டதை பிரித்தறியும் பகுத்தறிவையும் தந்துள்ளான். உலக மக்களுக்கு அருட்கொடையாக குர்ஆன் எனும் வேதத்தை, உலக மக்களுக்கு இறுதியாக ஒரு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் தந்து, அதன்படி நடக்கவும் கட்டளை பிறப்பித்துள்ளான். மனிதனை சிந்திக்கக் கூறுகிறது, நமது அனைத்து வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் தீர்வும் திருக்குர்ஆனில் உள்ளது.

ஒரு மனிதனை ஒருவன் கொலை செய்தால், இவ்வுலக அனைத்து மனிதர்களையும் கொலை செய்ததற்கு சமம். ஆகவே அநியாயமாக ஒருவனைக் கொலை செய்தவனை, பொதுமக்களின் முன்பு வைத்து கொலைசெய்வதுதான் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்பு. ஒருவன் திருடினால், அவனது கையைத் துண்டித்து விடவும்; அநியாயமாக ஒருவனது கண்ணை ஒருவன் குத்திக் குருடாக்கினால், அவனது கண்ணையும் அதேபோல் குத்தி குருடாக்கவும். விபச்சாரம் செய்தால், அவனை பொது மக்களின் முன்பில் வைத்து, அவன் செய்த விபச்சார குற்றத்தைப் படித்துகாட்டி, அவனை கல்லால் அடித்துக் கொலை செய்யவும், திருமணம் ஆகாதவன் எனில் 100கசையடி கொடுக்கவும் இஸ்லாம் தண்டனை அளிக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், பெரும் கொடூரம் போல் தெரியலாம்; சற்று பகுத்தறிவுக்கு ஊக்கம் கொடுத்துப் பார்த்தால் தெரியும், இது சரியான தண்டனைதான். இப்படி செய்தால் தப்பு செய்ய பயப்படுவார்கள், கொடூரமான தண்டனை கிடைக்கும், அதுவும் பொது மக்களின் முன்னிலையில் தண்டனைக் கொடுக்கும் போது பிறர் அதை உணர்ந்து, அந்த தப்பை செய்ய பயப்படுவார்கள், காரணம் தண்டனைகள் கடுமையானவை.

அல்லாமல் ஒருவன் பத்துபேரை கொலை செய்துவிட்டு, சிறைதண்டனை அனுபவித்து மீண்டும் வெளியில் வந்து அந்த தப்பு செய்யமாட்டான் என்று என்ன நிச்சயம்? சிறை கைதிகளுக்குத்தான் இப்போது வாரத்தில் ஒரு முறை இறைச்சி போடுகிறார்களாமே! வெளியில் அவன் சாப்பாட்டிற்கு அலைந்து திரிந்திருப்பான், சிறையில் என்றால் நல்ல இலவச சாப்பாடு, இலவச தங்கும் வசதி- போதாதைக்கு வேலை செய்தால் சம்பளமும் கொடுக்கிறார்கள். தண்டனை முடிந்து வெளியில் சென்றால், யாரும் அவனுக்கு வேலை கொடுப்பதுமில்லை, அவனும் அதற்கு முயற்சிப்பதில்லை. காரணம், ஜெயிலில் இதைவிட நல்ல சாப்பாடு, தூக்கம், சுக வாழ்க்கை. குற்றங்கள் எப்படி குறையும்?

 ஒருபக்கம் நீதிபதி வழக்குகளை முடித்துகொண்டிருக்கும் போது, அடுத்த பக்கம் வழக்குகளின் எண்ணம் கூடிக் கொண்டிருக்கிறது. தண்டனைகள் கடுமையாக இருந்தால், குற்றம் செய்ய நினைப்பவன் கூட, குற்றம் செய்ய நினைக்கமாட்டான். காலத்தின் நிலையைப் பார்த்தீர்களா? கொலைசெய்பவனுக்கு தெரியாது ஏன் கொலை செய்கிறோம் என்று, சாகிறவனுக்குத் தெரியாது- ஏன் நம்மை சாகடிக்கிறார்கள் என்று -அப்படி போய்கொண்டிருக்கிறது உலகில் இன்று.

 நொய்டாவில் அப்பாவி குழந்தைகளை விபச்சாரம் செய்து, படுபயங்கரமாக கொலை செய்து கசாப்புகடையில் வெட்டுவதுபோல், அப்பிஞ்சு உயிர்களை சிறுநீரகம், கண் என வியாபார முறையில் கையாள்வதிலும் குறை வைக்கவில்லை அக்கொடூரமான பாவிகள். இன்று அவர்களுக்கு, நாளை நமக்கும் அந்நிலமை வராது என்று எப்படி தைரியமாக இருக்கமுடியும்? நமக்கு என்ன பாதுகாப்பு? உயிர்கள் போனால், அநுதாபமாக சிறுது பணம் கொடுத்தால், போன உயிர்கள் திருப்பி வருமா? ரோட்டில் போய் கொண்டிருக்கிறான், திரும்பி வீடு வருவானா என யாருக்கும் நிச்சயம் இல்லை. மோட்டார் சைக்கிளில் வருகிறான், அரிவாளால் வெட்டி சாய்க்கிறான். ஏன்? அவனுக்கு பயமில்லை, 5வருடம் சிறையில் போடுவார்கள், திருப்பியும் வெளியில் வந்துவிடலாமென்று தைரியம். அதேசமயம், குற்றவாளியைப் பிடித்து, கொடூரமான முறையில் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் அளிப்பது உறுதி என்றால், தப்பு செய்ய யோசிப்பான், பயப்படுவான். அப்போது குற்றங்கள் நிச்சயம் குறையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Refer this page to your friends / relatives

Tamil Articles                           Home Page                           Next