இஸ்லாமிய இளைஞனே !
கடுகி வரும் உலக மயம்
தொழிலை விற்றுக் காசாக்கும் தனிமயம்
பெட்டிக்குள்ளே அடங்குகின்ற கணினி மயம்
உலக வங்கி அடுக்குகளில் வட்டிமயம்
பருத்திக் காட்டில் நடமலட்டு விதை மயம்
சந்தை வேற்று நாட்டாரின் பொருள் மயம்
நூறு கோடி மடங்குகளில் கடன் வாங்கி நாடு கடன் மயம்
வான் மையம் கொண்டால் மழை
கடல் மையம் கொண்டால் புயல்
பூமி மையம் கொண்டால் பூகம்பம்
நீ மையம் கொண்டால்...?
சுதந்திரமாய் வாழலாம் - இனி
நம்மைப் பிடித்துப் போக
தூண்டில் வரை எதுவும் வராது.
உற்சாகமாய் நீந்துகின்றன.
தொட்டியில் அடைப்பட்ட மீன்கள்!
இன்று அந்த மீனின் நிலையில் தான் நீ!
உனக்கு மட்டும் தான் கோபம் வரும் என்பதில்லை.
காற்றுக்கு கோபம் வந்தால் சூறாவளி.
கடலுக்கு கோபம் வந்தால் கொந்தளிப்பு.
பூமிக்கு கோபம் வந்தால் பூகம்பம்.
வானுக்கு கோபம் வந்தால் பேய்மழை.
நீ உதவி கேட்டால் ஒருவரும் முன்வரமாட்டார்கள்.
நீ பசியோடு இருந்தால் கவளம் சோறும் கிடைக்காது.
நீ நோயுற்றால் விலகிவிடும் சுற்றம்.
நீ உயிர் விட்டுவிட்டாலோ ஊர் கூடி உன்னை விசாரிக்கும்
"இது தாண்டா உலகம்"
வாழ்க்கை என்பது விளையாட்டா ஆடிச் செல்ல?
நிழல் மரமா படுத்துத் தூங்கிப் போக?
போர்க்களமா அதைப் போரிடுவதற்கு?
காகிதமா அதைக் கிழித்துப் போட ?
திரைப் படமா கண்டு பொழுதைப் போக்க...?
வெற்றி உன்னிடம் இருந்தால் முயற்சியே முதலீடு
கல்வி சிறக்க ஆசிரியரின் ஊக்குவிப்பே முதலீடு.
உலகம் புதிதாய் பிறக்க இளைஞர்களே முதலீடு
வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற
முன்னோர்களின் வார்த்தைகளே முதலீடு.
இலட்சத்தில் ஒருவனாய் இராதே! இலட்சியப் பிறவியாய் இரு!
முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும்.
எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும்.
தவறி விழுந்தாலும் விதையாய் விழு! விருட்சமாய் எழலாம்.
தோல்வியைக் கண்டு சோம்பல் கொள்ளாதே! கீழே விழுவது மீண்டும் எழத்தான்!
பயன்படுத்தாத வீட்டை பயன்படுத்திக் கொள்ளும் ஓட்டடை!
என்பது நினைவிருக்கட்டும். வாழ்க்கை என்பது பேருந்து பயணமல்ல!
அதன் படிக்கட்டுப் பயணம்! நகரப் பேருந்தில் நங்கையர் இருக்கைப் பயணம்
போன்றது! எந்த நேரமும் பறி போகலாம்!
மழை இல்லாத போது குடையும் ஒரு சுமைதான்.
மணம் இல்லாத போது பூவும் ஒரு சுமைதான்.
சுவாசம் இல்லாத போது காற்றும் ஒரு சுமைதான்.
அன்பு இல்லாத போது உறவுகளும் ஒரு சுமைதான்.
கனவுகள் இல்லாத போது தூக்கமும் ஒரு சுமைதான்.
(மார்க்க) கல்வி இல்லாத போது வாழ்க்கையும் ஒரு சுமைதான்.
அரியணை மயக்கத்தில் அரசியல்வாதிகள்.
திரை மயக்கத்தில் இளைஞர்கள்.
பட்டிமன்ற விவாதங்களில் அறிஞர்கள்.
பசி மயக்கத்தில் நம் மக்கள்!
நடிகைகள் குலுங்குவதை நீ ரசிக்கிறாய்!
லாட்டரி பம்பர் குலுக்கலை நீ விரும்புகிறாய்!
பூமி மட்டும் குலுக்கினால் ஏன் மிரளுகிறாய்!
நடிகைகளின் தொப்புள் குழியை ரசிக்கிறாய்! ஆனால்
கப்ர் குழியைக் கண்டு ஏன் நடுங்குகிறாய்?
நீ ஒய்யாரமாய் நடக்கின்றாய்.
ஒரு நிமிடம் சிந்தித்தாயா?
உன் நிமிர்ந்த நடைக்கு உரம் போட்டது யார் என்று?
உயிர் கொடுத்தவருக்கு உயிர் பயம் கேடு கெட்ட மகனால்.
குழந்தைகள் சிறிய வயதில் பெற்றோருக்குத் தலைவலி
அவர்கள் பெரியதான போது பெற்றோருக்கு நெஞ்சு வலி.
கப்பல் செல்ல கடல் கேட்பதில்லை தட்சணை
வண்டுகள் அமர மலர் கேட்பதில்லை தட்சணை
பறவைகள் தங்க இலைகள் கேட்பதில்லை தட்சணை
நட்சத்திரங்கள் தவழ வானம் கேட்பதில்லை தட்சணை
விலங்குகள் தங்க காடுகள் கேட்பதில்லை தட்சணை
தனக்காக வாழ வரும் பெண்ணிடம் மட்டும் நீ கேட்கிறாயே வரதட்சணை ?
வாழ்ந்து பார் வாழ்க்கை ஒரு தேடல்
முயன்று பார் முன்னேற்றம் உன் கைப்பிடி
துணிந்து பார் வீரம் என்பது உன் விரல் நுனியளவு
சிந்தித்துப் பார் சவால்கள் என்பது உன் சகோதரன்
ஆராய்ந்து பார் அறிவியல் என்பது உனக்கு அடிமை
ஏறிப்பார் சிறுத்துப் போகும் சிகரங்கள்.
அட்டாலும் பாலாய், அரைத்தாலும் சந்தனமாய்
சுட்டாலும் சங்காய், கெட்டாலும் பிறருக்கு
ஊறு செய்யாமல் வாழ்ந்தால்
மட்டற்ற இன்பம் மல்கும் உன்வாழ்வில்...!
இரக்கமில்லா மனிதனுக்கு இதயமே சுமைதான்!
பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகுகளே சுமைதான்!
மணக்கத் தெரியாத மலர்களுக்கு மகரந்தமே சுமைதான்!
உதவத் தெரியாத நண்பருக்கு நட்புகூட சுமைதான்!
உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு அறிமுகம் செய்ய
நன்றி: அல் ஜன்னத் மாத இதழ் -ஜூன்2006
தொகுத்து வழங்கியது: குளச்சல் சாதிக்.